சைக்கிள்காரன்

உலகம் என்னும் சாலையில் அனுபவித்து அழுத்திக் கொண்டிருக்கிறேன் வாழ்க்கை என்னும் சைக்கிளை
.....
அன்பே சிவம்
......




திண்ணை

திண்ணை
இது உங்கள் வீட்டு திண்ணை

தினமொரு திருக்குறள்

Friday, March 6, 2015

மாதம் மூன்று புத்தகங்கள் -1

மாதம் 200 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்குவது மற்றும் அதைப் படித்து முடிப்பது என்ற சபதத்தை எடுத்தாயிற்று. அந்த வகையில், பிப்ரவரியில் படித்து கிழித்தவை,

1. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி

நாகர்கோவிலின் தெற்கு மூலையில் ஒய்யாறமாய் வீற்றிருந்த ஒரு புளியமர்த்தை சுற்றி நடக்கும் கதையே இது. 1960 களில், அதாவது இன்றிலிருந்து 55 வருடங்களுக்கு முன்னால் மிகப் பெரும் தொலைநோக்கு பார்வையுடன் கதை எழுதப் பட்டிருக்கிறது. மனித மனத்தின் கோபம், வன்மம், காமம், பேராசை, ஒழுக்கம், அழுகை, சிரிப்பு, பொறாமை என அனைத்து உணர்வுகளையும் ஒரு புளியமரத்தை சுற்றிச் சுழல விடுகிறார். அந்தப் புளியமரத்தைச் சுற்றி நடக்கும் அரசியலையும் அண்மைச் சம்பவங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஆசிரியரை ஒரு தீர்க்கதரிசி என்றே சொல்லலாம். இன்று வரை அரசியலின் நிலைமை அதே அறுபதுகளின் நிலையிலேயே உள்ளதென்பதே மறுக்க இயலாத உண்மை. கதையின் நடை மிகத்தீவிரம், எந்த இடத்தில் இது அறுபதுகளுக்கான கதை என்ற சலிப்பை ஏற்படுத்தவே இல்லை.

2. ஓஷோ , ஒரு வாழ்க்கை # பாலு சத்யா - கிழக்கு பதிப்பகம்

சுருக்கமாகச் சொல்லப்போனால் “Osho's Life in a Nutshell", தெளிவாக ஆராய்ந்து அறுக்காமல் எழுதியிருக்கிறார். அவரை ஒரு மகானாகக் காட்டி, ஓப்பனிங் சாங் வைத்து ஒரு கமர்சியல் படமாக எடுக்காமல், அழகியலோடு யதார்த்த நடையில் எழுதப்பட்ட புத்தகம். ஒஷோப் பற்றி படிப்பது, ஹோலிப் பண்டிகைக்கு பாங்கு அடிப்பதும் ஒன்றே. ஆனந்தம், பரம ஆனந்தம். அவரை ஒரு பைத்தியக்காரன் என்றே பாதி படித்து முடித்தபோது எண்ணத் தோன்றியது, ஆனால் முழுவதும் முடித்தபோது, இந்தியாவின் தலைசிறந்த சுய சிந்தனைக்காரர் என்பதை ஒத்துக் கொள்ளமுடிகிறது. மேலும் அவரைப் பற்றி புத்தகங்களையும் படிக்கத்தூண்டுகிறது. அவரைப் பற்றி அறிய முனைவோருக்கு , இது ஒரு “கற்றுக்குட்டியாளர்களுக்கான கையேடு”.

3. மூங்கில் மூச்சு - சுகா. ஆ. வி பதிப்பகம்

ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே படித்து முடித்தது என்றாலும், திருநவேலியயையும், மாஸ்ட்டரையும் நினைவு கூர்ந்து கொள்ள, வசதியான கனவுப் புத்தகம். தினசரி தூங்குமுன் ஒரு அத்தியாத்தைப் படித்து முடித்து அந்த நினைவுகளிலே தூங்கிப்போவது என்பது ஒரு அலாதி சுகம். திருநவேலியிலிருந்து தள்ளி இருக்கும் நெல்லைக் காரர்கள் அனைவரும் வைத்துக் கொள்ள வேண்டிய புனித நூல் “மூங்கில் மூச்சு”. நெல்லைப் பக்கமே வராதவர்கள், இதைப் படித்து நெல்லையைப் பற்றி சுகாவுடனும் , அவர் நண்பர் குஞ்ஞுவுடனும் வாழ்ந்து தெரிந்து கொள்ளலாம்.

ஜனவரிக்கான புத்தகமான அஞ்ஞாடியை ஆராய்ந்துகொண்டிருக்கிறேன், அதைப் படிப்பதைவிட அதில் மூழ்கி அந்த ஆயிரத்து இருநூறு பக்ங்களில் குளிக்கவே எனக்கு விருப்பம்.

மார்ச்சுக்கான புத்தகங்களும் வந்தடைந்துவிட்டன, அடுத்தமாதம் பார்க்கலாம். அதுவரை காற்றில் பறக்கிறேன் , கல்யாண்ஜியுடன் வருகிறேன்.

சொலவடை